கிராமப்புறங்களில் நிகழ்ந்த 53% கொரோனா மரணங்கள்; வசதிகளின்றி தவிக்கும் மக்கள்; விழிக்குமா இந்தியா?
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது, அவ்வளவுதான். மற்றபடி கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாம் முழுவதுமாக வெளியே வந்துவிடவில்லை. அதிலும் சரியான மருத்துவக் கட்டமைப்பு இல்லாமல் இந்திய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் கொரோனா உட்பட பல நோய்களால் படும்பாடு வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இதற்கு எடுத்துக்காட்டாக மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பர் மாவட்டத்தைச் சொல்லலாம். வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பர் மாவட்டம் பழங்குடி மக்கள் வசிக்கும் மிகவும் பின்தங்கிய ஒரு மாவட்டம். கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது மகாராஷ்டிரா மாநிலத்திலேயே இந்த மாவட்டத்தில்தான் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது என்கிறது `இந்தியா ஸ்பெண்ட்' செய்தி நிறுவனம். Corona test -Represenational Image Corona test -Represenational Image கறுப்புத் தோல் உடையவர்களுக்கு பல்ஸ்ஆக்ஸிமீட்டர் தவறான மதிப்பீட்டைக் காட்டுமா? Also Read கறுப்புத் தோல் உடையவர்களுக்கு பல்ஸ்ஆக்ஸிமீட்டர் தவறான மதிப்பீட்டைக் காட்டுமா? இந்த மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது கொரோனா பரிசோதனைக்கான ரேப்பிட் டெஸ்டிங் கிட்கள் எதுவும் கிடையாது. அதுமட்டுமல்லாமல் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று ஓய்ந்துள்ளதால் அங்குள்ள கோவிட் கேர் மையங்களும் மூடப்பட்டுவிட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தவிர வேறு எந்தவோர் அவசர சிகிச்சைக்காகவும் ஆக்சிஜன் தேவைப்பட்டால்கூட அப்பகுதியில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மைல் கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த மே மாதம் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட மரணங்களில் 53% மரணங்கள் கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ளன என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science and Environment) தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையே மேற்சொன்ன புள்ளிவிவரம் நமக்கு உணர்த்துகிறது. கொரோனாவின் மூன்றாவது அலை மெள்ள மெள்ள மேலெழும்பிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்புகள் எவ்விதத்தில் அமைந்துள்ளன என்பதைக் கண்டறிவதற்காக, நந்துர்பர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு `இந்தியா ஸ்பெண்ட்' பயணம் மேற்கொண்டது. மகாராஷ்டிராவின் நந்துர்பர் மாவட்டத்தின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்புகள் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு எவ்விதத்திலும் தயாராக இருக்கவில்லை. காலாவதியான ஊசிகள் மற்றும் மாத்திரை, மருந்துகளே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்தகங்களில் இருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றைத் தவிர வழக்கமான அவசர சிகிச்சைகளுக்குத் தேவையான வசதிகளைக்கூட அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டிருக்கவில்லை. A health worker administers the vaccine A health worker administers the vaccine AP Photo/Mahesh Kumar A `தடுப்பூசி போடுவதில் தாமதம்; இந்தியாவின் ஜிடிபி குறையும்!' - எச்சரிக்கும் IMF Also Read `தடுப்பூசி போடுவதில் தாமதம்; இந்தியாவின் ஜிடிபி குறையும்!' - எச்சரிக்கும் IMF இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவைக் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்டிங் பரிசோதனையைச் செய்யும் வசதிகள் இல்லை. அதுமட்டுமல்லாமல் கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் ஆரம்பக்காலத்தில் மாவட்ட நிர்வாகம் அங்கு கோவிட் கேர் சென்டர்களை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. எனவே, ஏதேனும் ஒரு கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் அவர் அந்த மாவட்டத்தின் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், சரியான சாலை வசதிகள் இல்லாத அக்கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களில், ஆம்புலன்ஸ் சேவையும் சரியாக இருப்பதில்லை. கொரோனா படுத்தும் பாடு ஒருபுறம் என்றால், இங்குள்ள மக்கள் பாம்புக்கடியாலும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த மழைக்காலத்தின்போது நந்துர்பர் மாவட்டத்தின் சம்பிபடா என்ற கிராமத்தைச் சேர்ந்த கலுபாய் வல்வி என்பவரை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால், அவரின் கணவர் அவரை பக்கத்திலுள்ள ஜங்தி என்கிற கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக 2,000 ரூபாய்க்கு டாக்ஸி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இரண்டு மணி நேரம் பயணம் செய்து மோல்கி என்ற ஊரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அவரின் மகளும் பாம்பு கடிக்கு ஆளாக இதேபோலவே அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தவிர்த்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். நல்வாய்ப்பாக இருவரது உயிருமே காப்பாற்றப்பட்டிருக்கிறது. Snake bites Snake bites Pixabay மழைக்காலத்தின்போது நந்துர்பார் மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாம்புக்கடியால் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்று எனவும், தன் ஆறு பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துதான் மிகவும் கவலை அடைவதாகவும் கலுபாய் வல்வி கூறுகிறார். ``ஜங்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக, இரவு நேரத்தில் பணியாற்றுவதற்கும் அங்கு யாரும் இல்லை. இத்தனைக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், தண்ணீர், மின்சாரம் என்று எந்தவொரு வசதியும் இல்லாமல் பெயருக்கு மட்டுமே அது இருக்கிறது. அதனால்தான் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட என் மனைவியையும் மகளையும் இங்கு கொண்டு சேர்க்காமல் மோல்கியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்” என்று வருத்தம் மேலிடப் பேசுகிறார் கலுபாய் வல்வியின் கணவர் நிம்ஜி. நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள மன்ட்வி என்கிற மற்றுமொரு கிராமத்திலும் பாம்புக்கடியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி பாம்புக்கடியால் பாதிக்கப்படுபவர்களை அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தட்கான் கிராமப்புற மருத்துவமனைக்கோ, 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நந்துர்பர் சிவில் மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள ஆரம்பசுகாதார நிலையமே பரிந்துரைத்துவிடுகிறது என்பதுதான் வேதனையான செய்தியே. பாம்புக்கடியால் மக்கள் பாதிக்கப்படுவது என்பது இவர்கள் சந்திக்கும் அபாயங்களில் ஒன்றுதான். இங்குள்ள பெண்களுக்கு மகப்பேறும் அத்துணை பாதுகாப்பாக இருப்பதில்லை. Pregnant women Pregnant women கொரோனா 3-ம் அலை... பயப்படத் தேவையில்லை... நம்பிக்கை தரும் ஆய்வுகள்! Also Read கொரோனா 3-ம் அலை... பயப்படத் தேவையில்லை... நம்பிக்கை தரும் ஆய்வுகள்! இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால் வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பிரசவம் நடக்கிறது. இந்தியாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சென்றடைய பெரும்பாலான இந்திய மக்கள் சராசரியாக 8 கிலோமீட்டர் வரை நடக்கின்றனர். அதிலும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த 8 கிலோமீட்டரின் பல மடங்கு தூரம் வரை நடந்தே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்கின்றனர். ஆனால், இதில் மிகவும் துயரமான செய்தி என்னவென்றால் நாடு முழுக்க வெறும் 24,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன என்று பொது சுகாதாரம் சார்ந்து பணியாற்றும் ஆரோக்கிய சேனா என்கிற அமைப்பின் தேசியத் தலைவர் அபிஜித் வைத்யா கூறியிருக்கிறார்.
